TamilNatpu


1.03.2013

ஏமாறப் போகிறோமா?


அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ள "தேசிய நீர்க் கொள்கை-2012" குறித்து சொல்வதானால் - "நீர் என்பது பொருளாதாரம் சார்ந்த, விற்பனைக்கான பொருள்! அதனால், குடிநீர் மட்டுமன்றி,  பாசனம் உள்ளிட்ட எல்லாப் பயன்பாட்டிலும் நீருக்கு விலை உண்டு" என்பதுதான். தவித்த வாய்க்குத் தண்ணீர் என்றெல்லாம் யாரும் இனி பேசக்கூடாது!

 தேசிய நீர்க் கொள்கைக்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறாத சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றாலும், இந்த நீர்க்கொள்கை பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது. பொதுக் கருத்துகளுக்குப் பிறகு சிறிய, மாற்றங்களுடன் அமலுக்கு வரும். ஆனாலும், அடிப்படை விஷயம் என்னவோ, நீருக்கு விலையுண்டு என்பதுதான்.

 மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர், நதிப்பள்ளத்தாக்கு, நீர்ப் பயன்பாடு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமான, பரவலான தேசிய நீர் கட்டமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும், இது காலத்தின் கட்டாயம் என்று மத்திய அரசு இந்தப் புதிய நீர்க் கொள்கையின் தேவை குறித்த முன்மொழிவில் கருத்து தெரிவிக்கிறது.

 இந்த தேசிய நீர்க் கொள்கை வெறும் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க மட்டுமே இருந்தால் பரவாயில்லை. மாநிலப் பட்டியலுக்கு உள்பட்ட, அணை, நதிநீர் அனைத்திலும் மேலாண்மை செய்ய வகை செய்கிறது. இதன் தீவிரத்தை தமிழக மக்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 மாநிலங்கள் புதிய அணைகள் கட்ட விரும்பினால், புவிவெப்பக் கட்டுப்பாடு கருதி, அணையின் வடிவமைப்பிலும் நீர் மேலாண்மையிலும் ஏற்புடைய விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதில் யாரும் ஆட்சேபணை சொல்ல முடியாது. ஆனால் சுற்றுச்சூழலைக் காக்கத் தேவையான நீர், எப்போதும் நதியில் ஓடும்படி பார்த்துக்கொள்ள விதிமுறைகளையும் வலியுறுத்துகிறது புதிய நீர்க்கொள்கை.

 அதாவது, மாநிலத்திற்கு உட்பட்ட, பிரச்னை இல்லாத நதியாகிய தாமிரவருணியில்கூட, எவ்வளவு நீர் எப்போதும் ஓடவேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். இதன் மூலம் மாநில அரசின் பொறுப்பில் உள்ள தாமிரவருணி, மத்திய அரசின் தலையீட்டுக்கு உள்ளாகியே தீரும். பாசன நீர்ப் பங்கீடுகளை, மத்திய அரசு சொல்லும் சுற்றுச்சூழல் காப்புநீர் அளவைக் கழித்துக்கொண்டுதான் தீர்மானிக்க நேரிடும்.

 வேளாண்மை, தொழில், வீட்டுப்பயன்பாடு என ஒவ்வொரு பிரிவிலும் "திறனுறு பயன்பாட்டு அளவு" தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீர் ஒழுங்காற்று ஆணையம் அமைத்து நீருக்கு உரிய விலை நிர்ணயக்க வலியுறுத்துகிறார்கள்.

 நீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரை, தங்களுக்கான எல்லைக்குள்பட்ட பகுதியில் விநியோகித்து, நிர்வகித்து, பங்கீடு செய்துகொள்வதோடு, நீர் கட்டணத்தை வசூலிக்கவும், அதில் ஒரு பகுதியை தாங்களே வைத்துக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கிறது இந்தப் புதிய நீர்க் கொள்கை. இதில் "விவசாயம்" என்று ஒரு வார்த்தைகூட இல்லாவிட்டாலும், இது முழுக்க முழுக்க விவசாயிகளைக் குறித்தது. நதிநீர்ப் பாசனம், ஏரிப்பாசனம் எல்லாமும் இதில் அடங்கிவிடும்.

 அதுமட்டுமல்ல, தேவைக்கும் அதிகமான நீர், மின்சாரம் இரண்டும் வீணடிக்கப்படுவதன் காரணம், குறைந்த மின்கட்டணம்தான்; இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்கின்றது புதிய நீர்க் கொள்கை. இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை மட்டுமல்ல, விவசாய மின்சாரத்துக்கு சலுகைக் கட்டணம்கூட வழங்கக்கூடாது என்பதை இந்த ஷரத்து வலியுறுத்துகிறது.

 எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, நீர் விநியோகத்தில் அரசாங்கம் "சேவை வழங்குபவர்" என்ற நிலையிலிருந்து "சேவையை ஒழுங்குபடுத்துபவர்", நீர் மேலாண்மை நிறுவனங்களுக்குத் தேவையான "வசதிகளை அளிப்பவர்" என்ற நிலைக்கு மாறும். அதாவது நீர் விநியோக சேவை என்பது, சங்கங்களுக்கோ அல்லது அரசு - தனியார் பங்கேற்பு நிறுவனங்களின் பொறுப்புக்கோ மாற்றப்படும்.

 இதன்படி, குடிநீர் வழங்கல் என்பது இனி உள்ளாட்சிகளின் சேவை அல்ல. அது தனியார் நிறுவனங்களின் வியாபாரமாக மாறும். அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்திகரிக்கப்படாத வீட்டுப் பயன்பாட்டுக்கான நீர் என இருவகை நீர் விநியோகத்தைக் கடைப்பிடிப்பார்கள். இரண்டுக்கும் இரண்டுவிதமான கட்டணம் வசூலிப்பார்கள்.

 நதிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும், அதன் தூய்மை காக்கப்பட வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது. இந்தியாவில் நகரங்களிலும், தொழிற்கூடங்களிலும், விவசாயத்திலும்கூட நீர் வீணாக்கப்படுகிறது என்பதும் உண்மையே. இதற்கு அரசு செய்யவேண்டியது - நீரை வீணாக்காமல் பொறுப்பாகப் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கண்காணிப்பதும்தான். நீருக்கு விலை நிர்ணயிப்பது அல்ல!

 பாசன நீருக்கு விலை நிர்ணயிப்பதன் மூலம், விவசாயிகள் நீர் அளவைக் குறைத்து, தேவையான நீரை மட்டுமே சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள் என்பது மத்திய அரசின் கருத்தாக இருக்கலாம். இதனால், அதிக நீர் தேவைப்படும் நெற்பயிரைக் கைவிட்டு, வேறுபயிர்களுக்கு மாறினால், உணவுத்தட்டுப்பாடுதான் ஏற்படும். அப்படி ஏற்படும்போது இறக்குமதி செய்து அதில் தங்களுக்கும் "வருவாய்" தேடிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

 எல்லாவற்றுக்கும் மேலாக, தண்ணீர் விநியோகிப்போர் அனைவரும், கேபிள் டி.வி. போல அரசியல் சார்புடையவர்களாக, ஆளும் கட்சிக்கு இசைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள், சேவை அல்ல.

 இந்த நீர்க்கொள்கை மீதான கருத்துகளை பொதுமக்கள் பிப்ரவரி 29 வரை தெரிவிக்கலாம்.. "நீருக்கு விலை கூடாது" என்பதுதான் மக்களின் ஒரே குரலாக இருக்க வேண்டும்.

 சாலைகளில் சுங்கம் வசூலிப்பதில்  கோட்டை விட்டு விட்டோம். இதிலும் நாம் விழிப்புணர்வுடன் இல்லாமல் போனால், நிரந்தரமாக ஏமாந்து விடுவோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் இந்தியச் சமுதாயத்தைத் தட்டி எழுப்புவது யார்? அரசியல்வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும் வஞ்சிக்கப்படும் அப்பாவி இந்தியர்களுக்கு யார் இதை உணர்த்துவது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக