TamilNatpu

10.04.2012

பாரதியாரின் பாடல்கள்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு
சேர்ப்பாரோ? 

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்

பாரதியாரின் பாடல் அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பின்குறிப்பு:

இப்பாடலுக்கும் இந்திய அணியின் டி-20 உலகக்கோப்பை செயல்பாட்டிற்கும்

எவ்வித சம்பந்தமும் இல்லை.