TamilNatpu


10.04.2012

பாரதியாரின் பாடல்கள்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு
சேர்ப்பாரோ? 

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்

பாரதியாரின் பாடல் அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே





பின்குறிப்பு:

இப்பாடலுக்கும் இந்திய அணியின் டி-20 உலகக்கோப்பை செயல்பாட்டிற்கும்

எவ்வித சம்பந்தமும் இல்லை.



8.21.2012

பஸ்டிரைவர்களுக்கு மோட்டல்களில் குவாட்டர் சப்ளை


நெடுந்தூரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், உணவுக்காக நிறுத்தப்படும், சாலையோர, “மோட்டல்களில், டிரைவர், நடத்துனர்களுக்கு, குவாட்டர் வழங்குவதாக, பகீர் தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள், தொலைதூர பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, நகர, கிராமப் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை - சென்னை, சேலம் - பெங்களூரு, மதுரை - கோவை, கோவை - திருப்பதி என, பல வழித்தடங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையிலும், பயணிகளின் உணவு மற்றும் கழிவறை வசதிக்காக, மோட்டல்கள் செயல்படுகின்றன. இங்கு, பஸ் டிரைவர், நடத்துனருக்கு இலவசமாக உணவு வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான சிகரெட், ஹான்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகம், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, பஸ் டிரைவர், நடத்துனர்களிடம், குறிப்பட்ட மோட்டல்களில் மட்டுமே, நிறுத்த வேண்டும், மற்ற இடங்களில், நிறுத்தக்கூடாது என்ற கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அரசு பஸ் டிரைவர்களில் பலர், அதை கடைபடிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு, அந்த கட்டுப்பாடு இல்லை.

டிரைவர்கள் தங்களுக்கு விருப்பமான, பாதுகாப்பு இல்லாத இடங்களில், பஸ்சை நிறுத்துகின்றனர். அவர்கள் பஸ் நிறுத்தும் இடத்தில், தரமற்ற உணவு கிடைக்கிறது. பெண்கள் கழிவறைக்கு செல்வதற்கான வசதியில்லை என, பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, சில, மோட்டல் உரிமையாளர்கள், பஸ் தங்களுடைய இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காக, மது சப்ளை செய்வதாக கூறப்படுகிறது. மதுவைப் பெறும் டிரைவர்களில் சிலர், அங்கேயே பாதியை அருந்திவிட்டு, பஸ்சை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

தனியார் பஸ்களை இயக்கும் நிறுவனங்கள், எந்த, மோட்டலில் பஸ்களை நிறுத்த வேண்டும் என்று எவ்வித கட்டுப்பாடுகளும் விதிப்பது இல்லை. தனியார் பஸ்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அதில் பயணிக்கும் பயணிகளை கவர, டிரைவர்களுக்கு, மோட்டல் உரிமையாளர்கள், சரக்கு வழங்குகின்றனர்.அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை, பயணத்தின் போது, போக்குவரத்துத் துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டால், உண்மை தெரியவரும்.

இதனால்தான் இப்படி இருக்கும் பஸ் 




இப்படி ஆகிவிடுகிறதோ.



இதற்கு முந்தய பதிவிற்கும் இந்த பதிவிற்கும் எவ்வித தொடர்பும்  சத்தியமாக கிடையாது. தொடர்பு உள்ளதாக நினைப்பது அவரவர் சொந்த கருத்துகளே.

தமிழா தமிழா நாளை நம் நாளே!!!!






"நாட்டில், 2011ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், 1.36 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும், 15 ஆயிரத்து 422 பேர் இறந்துள்ளனர்' என, தேசிய போக்குவரத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்கில், இந்த மையம் சார்பில், வெளியிடப்பட்ட அறிக்கை: நாட்டில், 2011ம் ஆண்டில், 4.40 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 1.36 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக, 65 ஆயிரத்து 873 விபத்துகளும், மகாராஷ்டிராவில், 47 ஆயிரத்து 120, கர்நாடகாவில், 44 ஆயிரத்து 696, ஆந்திராவில், 41 ஆயிரத்து 66 விபத்துகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் நடந்த விபத்துகளில், 15 ஆயிரத்து 158 பேரும், உ.பி.,யில், 14 ஆயிரத்து 996, மகாராஷ்டிராவில், 13 ஆயிரத்து 680 பேரும் இறந்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில், டில்லி முதலிடம் வகிக்கிறது. இங்கு நடந்த, 7,280 சாலை விபத்துகளில், 2,107பேர் பலியாகியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், லட்சத் தீவுகளில், எந்த சாலை விபத்துகளும், இறப்புக்களும் நிகழவில்லை. நாகாலாந்தில், மிகக் குறைவாக, 32 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 36 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் நடந்த சாலை விபத்துகளில், 13 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஐந்து கோடி பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.14.2012

ஈமு கோழி - உண்மை நிலவரம் என்ன






ஈமு கோழி வளர்ப்பின் மூலம் ஒரு கோழிக்கு ரூ.2,750 லாபம் கிடைக்கும் என்று அதிர்ச்சி அளிக்கும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார் கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீர்முகமது.ஈமு கோழி வளர்ப்பில் ஒரு கோழிக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து, கால்நடைப் பல்கலை கழகப் பேராசிரியர் மற்றும் தேனி உழவர் பயிற்சி மைய தலைவர் பீர்முகமது கூறியதாவது,

ஈமு முட்டையிடும் கோழி அல்ல. ஒரு ஈமுக் கோழியை 16 மாதம் வளர்த்து விற்பனை செய்தால், அதன் மூலம் சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை தான் லாபம் கிடைக்கும். 16 மாதம் வளர்ந்த கோழிகள் தான் விற்பனைக்கு ஏற்றவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வளர்ந்த கோழிகளின் கறியும், கொழுப்பும் விற்பனைக்கு உகந்தது அல்ல. சுவையும் குறைவாக இருக்கும்.

16 மாதம் வளர்ந்த கோழி, சராசரியாக 40 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஈமு கோழிகளைக் கறிக்காக வெட்டும் போது உயிர் எடையில் பாதி அளவு தான் கறி இருக்கும். ஒரு கிலோ கறி 350 ரூபாய் விலையில் விற்றால் 20 கிலோவுக்கு 7,000 ரூபாய் கிடைக்கும்.அதே போல 7 கிலோ கொழுப்பு கிடைக்கும். ஒரு கிலோ கொழுப்பு ரூ.750 வீதம் ரூ.5,250 வருவாய் கிடைக்கும். தோல் ரூ.500 வி விலை போகும். ஆக மொத்தம் 16 மாதம் வளர்ந்த ஒரு ஈமு கோழியில் இருந்து ரூ.12,750 வருமானம் மட்டுமே கிடைக்கும்.

ஒரு கோழி தனது உடல் எடையைப் போல் 5 மடங்கு தீனியை உட்கொள்ளும். ஒரு கிலோ தீனி ரூ.30 விலை என்றால், 200 கிலோ தீனிக்கு சுமார் ரூ.6 ஆயிரம் செலவாகும். குஞ்சு விலை ரூ.3 ஆயிரம், பராமரிப்புச் செலவுக்கு ரூ.1,000 என்று செலவுக்கணக்கில் ரூ.10 ஆயிரம் போக, மீது ரூ.2,750 வருமானமாக கிடைக்கும். ஈமுக் கோழியில் இதை விட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.

பீர்முகமது தனது கருத்துக்களைப் பல்வேறு மேடைகளிலும், மக்கள் மத்தியிலும் விளக்கி வருகின்றார். அவரது கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.ஆனால் ஈமு கோழி வளர்ப்பில் பொதுமக்கள் ரூ.பல கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அது மோசடி என்று போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.