TamilNatpu


10.18.2010

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்றெல்லாம் பாராட்டப்பட்ட தமிழனின் இன்றைய நிலை என்ன?

- தொப்பூள் கொடி சொந்தங்கள் கருவருக்கப்பட்டாலும்
   வாய் மூடி   மெளனவிரதம் இருப்பதேன்.

- கொன்று குவித்த இராட்சசனுக்கு  நம் நாட்டிலே
   விருந்தினராக  சிவப்பு கம்பள வரவேற்பு.

- தமிழனுடைய போர்குணம் எங்கே போயிற்று,
   ஒருவேளை மானாட மயிலாட பார்த்து
     குறைந்து விட்டதோ

- தமிழ் நாட்டில் தொப்பூள் கொடி சொந்தங்கள் பற்றி
   பேசினால்  தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமாம்

-  நாம் வாழ்வது ஜன நாயக நாடா
   அல்லது மன்னராட்சியா

- பேசுவதற்கும் உரிமை இல்லையா

-  மீறீப் பேசும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர்
   தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது இந்தி எதிர்ப்பு
   போராட்டம் நடத்தியவர் எடுத்த   நடவடிக்கை

-  இவர் மீது  தேசிய பாதுகாப்பு சட்டம் ஏன் பாய வில்லை.

-  ஆளும் கட்சிக்கு கூட்டணியைப் பாதுகாக்கும் கவலை
   எதிர் கட்சிக்கோ   அங்கு இருப்பவர் அனைவரும்
   பொடியன்கள்.

- தமிழா எப்பொழுது  அங்கே அழும் உன் சகோதரனின்
   அழுகுரல் மானாட மயிலாட  நிகழ்ச்சியை  தாண்டி
   உன் காதில் விழும்.

- திபெத்திய அகதிகளுக்கு வெண்ணெய் தரும் மத்திய
   அரசு தமிழ் அகதிகளுக்கு சுண்ணாம்பு தருவது ஏன்

- உலகத் தமிழின ஒரே தலைவருக்கு பேரன்களுக்கு
  விரும்பிய துறை வாங்க  டெல்லி செல்ல நேரம்
   ஒதுக்க முடிந்தது.
  அகதி தமிழனுக்குகாக கடிதம் எழுதுகிறார்.கடிதம்
  போய் சேர்கின்றதோ இல்லையோ ஆண்டவனுக்கும்
  ஆளுகிறவருக்குமே வெளிச்சம்

- எம் சொந்தங்களே தயை கூர்ந்து மன்னித்தருளுங்கள்.
   யாரேனும் இன்னும் மிச்சமிருந்தால்.

எம்மால் முடிந்ததும் இந்த பதிவு மட்டும்தான்.

எவன் எங்கு செத்தால் எங்களுக்கென்ன

ஏனென்றால் எங்களுக்கு “எந்திரன்” வந்துவிட்டது. அது
இல்லை என்றால் மட்டைபந்து விளையாட்டு இருக்கிறது,
அதுமில்லை என்றால் மானாட மயிலாட இருக்கிறது.


தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா

10.17.2010

மன திருப்தி நீதிக்கதை

முக்கிய குறிப்பு:

இந்த நீதிக்கதைக்கும் காமன்வெல்த் விளையாட்டிற்கும்
எந்த வித சம்பந்தமும் இல்லை. ஏதேனும் சம்பந்தம்
இருப்பதாக கருதினால் அது அவரவர் சொந்த கருத்துகளாகும்.

                            வாழ்க இந்தியா வளர்க ஜனநாயகம்.

                                                           ஜெய்ஹிந்த்

திருப்தி

ஒரு முறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தான். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். வழியில் செல்லும்போது சில வழிப் போக்கர்கள் இவர்களைப் பார்த்துச் சிரித்தனர். பிறகு, “அந்த முட்டாளைப் பாருங்கள்! இருவருமே நடந்து போகிறார்கள்! யாராவது ஒருவர் கழுதையின் மீது சவாரி செய்யலாமே”, என்று கேலியாகச் சொன்னார்கள். அதனால், தன் மகன் கழுதையின் மீது ஏறி உட்காரட்டும் என்று விவசாயி தீர்மானித்தான். மகன் கழுதை மீது சவாரி செய்ய விவசாயி பயணத்தைத் தொடர்ந்தான்.
 
சிறிது தொலைவு சென்ற பிறகு, வேறு சிலர் பார்த்தனர். வயதான தந்தை நடந்து வர இளவயது மகன் இவ்வாறு கழுதையின் மீது அமர்ந்து வருகிறானே என்று இவர்களைக் கோபித்துக் கொண்டனர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் அவர்களைத் திருப்தி செய்ய உடனே மகன் கீழிறங்கித் தந்தையைக் கழுதையின் மீது உட்காரச் செய்தான். தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சிறிது தொலைவு சென்றதும், வீட்டுவாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில முதிய பெண்களைப் பார்த்தனர். அந்தப் பெண்கள், “தான் வசதியாக உட்கார்ந்து கொண்டு அந்த முதியவன் மகனை நடந்து வரச் சொல்லிக் கொடுமைப்படுத்துகிறானே”, என்று விவசாயியைக் குற்றம் சாட்டினார்கள். விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தன் மகனையும் தன்னோடு கழுதையின் மீது அமர்த்திக் கொண்டான்.
 
இ்ப்போது தந்தையும் மகனும் மகிழ்ச்சியாகக் கழுதையின் மீது அமர்ந்து பிரயாணத்தைத் தொடர்ந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த சில உழவர்கள் இவர்களைப் பார்த்தனர். “எத்தகைய கொடூரமானவர்கள்! பாவம், அந்தக் கழுதை, கண்டிப்பாகச் சுமை தாங்காமல் நொடிந்து போகும்”, என்று விமர்சித்தார்கள். இதைக் கேட்டவுடன் தந்தையும் மகனும் உடனே கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது.
 
விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக மூச்சு விட்டது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! ஏமாற்றமடைந்த விவசாயி வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.
 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது.
 
 
 
 
 
 
 

10.11.2010

தமிழேன்டா ( நகைச்சுவை)

 நெட்டில் படித்தது,



மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் திரு.பில் கேட்ஸ் அவருடைய நிறுவனத்திற்கு புதிய நிர்வாகியைத் தேர்வு செய்வதற்கு ஒரு நேர்காணல் நடத்துகிறார். ஒரு பெரிய அறையில் 5000 இளைஞர்கள் நேர்காணலுக்காக  அமர்ந்திருந்தனர். அவர்களில் நம் ராமசாமியும் ஒருவர்.

திரு. பில்கேட்ஸ் :  தங்கள் வருகைக்கு நன்றி.
                                       ஜாவா தெரியாதவர்கள் இந்த
                                       அறையை விட்டு வெளியேறலாம்.

                     ( 2000 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )

திரு.ராமசாமி        :   நமக்கும்தான் ஜாவா தெரியாது.
(தனக்குள்)                 இந்த அறையில்இருந்தால் என்ன
                                       நஷ்டம் ஆக போகுது. இருந்துதான்
                                       பார்ப்போமே.

திரு.பில்கேட்ஸ்  : 100  இளைஞர்களை  நிர்வாகிக்கும்
                                     அனுபவம் இல்லாதவர்களும் இந்த
                                     அறையை விட்டு வெளியேறலாம்.

                ( அடுத்த 2000 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )

திரு.ராமசாமி        :   நான்கூடத்தான் யாரயும்
(தனக்குள்)                 நிர்வாகிக்கவில்லை. இங்குஇருந்தால்
                                      என்ன நஷ்டம் ஆக போகுது.
                                      இருந்துதான் பார்ப்போமே.


திரு.பில்கேட்ஸ்  : இளநிலை நிர்வாகவியல் பட்டயப்
                                     படிப்பு இல்லாதவர்களும் இந்த
                                     அறையை விட்டு வெளியேறலாம்.

                ( அடுத்த 500 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )

திரு.ராமசாமி        :    நாம 10 கூட தாண்டலை, இதுல 
(தனக்குள்)                 எங்க இளநிலை நிர்வாகவியல்
                                       பட்டயப் படிப்பு.  என்னதான்
                                       நடக்கும் நடக்கட்டுமே .


திரு.பில்கேட்ஸ்  : இங்கு யாருக்கெல்லாம்
                                      செர்போ-க்ராட் மொழி 
                                      தெரியாதோ அவர்களும்
                                      வெளியேறலாம்.

                 ( அடுத்த 498 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )


திரு.ராமசாமி        :  நம்மளுக்கு தமிழே ஒழுங்கா தெரியாது.
(தனக்குள்)              ஆங்கிலமும்அரைகுறை. இதுல
                                    செர்போ-க்ராட் மொழியா எவன்யா
                                    இதுலாம் கண்டுபிடிச்சான் என்று
                                    எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்க்க
                                    இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.
                                    மற்ற அனைவரும் சென்று விட்டனர்,

திரு.பில்கேட்ஸ்  :  நல்லது உங்கள் இருவருக்கு
                                       மட்டும்தான் செர்போ-க்ராட்  
                                       மொழி தெரியும் போல,
                                       எனக்கும் தெரியாது. நீங்கள் 
                                       இருவரும் உரையாடுங்கள்.
                                       நான் உங்கள் 
                                       உரையாடலைக் கேட்கிறேன்

திரு. ராமசாமி       : எந்த ஊரு
(மெதுவாக
இன்னொருவர்
பக்கம் திரும்பி)

இன்னொருவர்    : நமக்கு மதுரை பக்கம்.


தமிழேன்டாடாடாடாடாடா

10.09.2010

பென் டிரைவ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது.(காணொளி)

தற்பொழுது பென்டிரைவ் உபயோகப்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு.
அந்த பென்டிரைவ் எவ்வாறு உருவாகிறது என தெரிந்தவர்கள் மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது தொடர்பான ஒரு அற்புதமான காணொளி காண நேர்ந்தது. நண்பர்கள் பார்வைக்காக இதோ அந்த சுட்டி

http://www.youtube.com/watch?v=g_6mMFmes1s&feature=player_embedded#!

பென் டிரைவ் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள கிங்ஸ்டன் நிறுவனத்தின் தயாரிப்பு எவ்வாறு உருவாகிறது என்பதைப் பற்றியது.

10.08.2010

சில சந்தேகங்கள் கேட்க கூடாதவை

    தமிழக முதல்வர் திரு. கலைஞர் நாத்திகரா ஆஸ்திகரா?
  
    நாத்திகர் என்றால் ஏன் தஞ்சை பெரிய கோவிலில் நுழைவாயில்   
    வழியாக நுழையாமல் மாற்று வழியில் வந்தார்.

    இந்தி ஒழிப்பு போராட்டம் நடத்தியவரின் வாரிசுகள் இந்தி படித்த மர்மம்  
    என்ன?

    கட்சி வேட்டி மட்டுமே அணிய வேண்டும் என்று மகனுக்கு சொன்னவர் 
    தஞ்சையில் பட்டு வேட்டியில் ஏன் வரவேண்டும்?

    கோவையில் நடந்தது தமிழ் செம்மொழி மாநாடா அல்லது கட்சி 
    பொதுக்கூட்டமா?

    இலவச தொலைக்காட்சி தந்தவர் ஏன் இலவச கேபிள் தரவில்லை?

    அரசு கேபிள் அடக்கமாக செயல்படுகிறதா? அடக்கம் செய்யப்பட்டதா?

    தமிழில் பெயர் மட்டும் வைத்தால் திரைப்படங்களுக்கு
    கேளிக்கை வரி ரத்து செய்யபடுகிறதே  இதனால் தமிழுக்கு ஏற்பட்ட  
     நன்மை  என்ன?

    108 அவசர ஊர்தி மத்திய அரசின் திட்டமா அல்லது
    மாநில அரசின்     திட்டமா?

    திரைப்படம் வெளியிட்டால் மட்டும் திரு.ரஜினிகாந்த்
   அரசியல் பேசும்    மர்மம் என்ன?

    வீணாகும் உணவு தானியங்களை வறுமைக்கோட்டிற்கு
   கீழ் உள்ள   மக்களுக்கு வழங்க முடியாது என நீதிமன்றத்தில்
   சொன்ன    திரு.மன்மோகன் சிங் அரசு கைபேசி இலவசமாக
   தருவதாக சொல்வது   ஏன்?
   
   தொடரும்

நல்ல சிந்தனைகள் (படித்ததில் பிடித்தது)

         ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்கு
         கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான் என்பதைப்
         பொறுத்தே அமைகிறது.

         ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக
         இருப்பினும் கோபத்தை அவன் அடக்காவிட்டால் முழுமையான
         துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.

         ஒருவனுடய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு கோபம்
          தணிந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.

        கோபம் கொள்ளுதல் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற 
         பிரதிக்கிரியைய் என்றும் அது வாலிபப் பருவத்திலும்
         அதற்குப் பின்னும் தொடர்கிறது.

         தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும்
         காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.

         ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக
         இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற
         முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.
              
      
            

     எனது சிந்தனைகள் அல்ல. என்றோ எதிலோ படித்தது.

     உரிமையாளர் மன்னிக்கவும்.


 

10.05.2010

படித்ததில் பிடித்தது (தினமணி)

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

 தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

 படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

 ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

 வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

 நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

 மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

 ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

 சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

 இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

 படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

 தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

 "எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!


நன்றி தினமணி

10.04.2010

படித்ததில் பிடித்தது

மீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். மதுரையின் வெயில் போலவே... மழையும் உக்கிரம்தான். அடித்துக் கொட்டிய மழையில்... வடக்குக் கோபுர வாசலில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். பின்னால் தொங்கும் சேலைத் தலைப்பும், கணுக்கால் புடவையும் நனையாமல் தூக்கிப் பிடித்து, கவனமாக ஒவ்வொரு அடியாக வைத்தேன். அப்போதுதான் அவர்களைப் பார்த்தேன்.
இரு சிறு பெண்கள். பத்து, பன்னிரண்டு வயதிருக்கும். 'உடைகள் நனையுமே' என்றோ... 'தலை ஈரமாகிவிடுமே' என்றோ... கவலையே இன்றி, 'சளப் சளப்' என்று தண்ணீர் காலில் படும் இன்பத்தை முழுவதும் அனுபவித்த படி, ஒருவர் கையை இன் னொருவர் பிடித்து, சிரிப்பில் குலுங்கியபடி நடந்தனர். அந்தத் தோழிகள் பற்றிக் கொண்ட கைகளில் என்ன சுவாதீனம், எத்தனை சுதந்திரம், எத்தனை சந்தோஷம்! அந்த மழைக் குளிரை விரட்டிய கதகதப்பு அவர்களின் தோழமை தந்த கதகதப்பல்லவா? பார்த்துக் கொண்டே நின்றேன்... கையிலும் மனதிலும் கனக்கும் சுமைகளுடன்!
கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா? நம் தோழிகளை எங்கே இழந்தோம் நாம்? பத்தாம் வகுப்பில் நான், அனிதா, சுதா, முத்துலஷ்மி எல்லோரும் ஒரே பெஞ்ச். வகுப்பில் எங்கள் ரகளை ரொம்ப பிரபலம். ஃபிசிக்ஸ் மிஸ் எங்களின் குறும்பு பொறுக்காமல், ஒரே பெஞ்ச்சில் இருப்பதால்தான் தொல்லை என்று வேறு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றிவிட்டார்.
நான்கு பேரும் உடனே வாழ்வை வெறுத்தோம். மையிட்டெழுதவில்லை. மலரிட்டு முடியவில்லை. உணவையும் உலக இன்பங்களையும் துறந்து மூன்று நாள் அழுது களைத்தோம். என் அழுகை பொறுக்காமல், என் அம்மா மிஸ்ஸிடம் வந்து வேண்டுகோள் வைக்க, 'இனி சேட்டை கூடாது' என்ற உத்தரவுடன் திரும்பவும் ஒரே பெஞ்ச்சில் உட்கார வைக்கப்பட்டோம்.
அவர்கள் மூவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் பெண்ணின் வாழ்க்கை.
ஒரு நிலத்தில் முளைக்கும் நாற்றைப் பிடுங்கி எடுத்து, வேறு ஒரு நிலத்தில் நடுவது போல்... பெண்ணும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குள் திருமணத்துக்குப் பின் நடப்படுகிறாள். இதில், அவள் இழந்து போனவை, போனவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது, அவளின் நட்பும், தோழிகளும்தான்.
'' 'பசங்க' படத்துல வர்றது மாதிரி, 'இந்த அடிய நாளைக்கு வரைக்கும் மறக்காத...'னு தினமும் ஸ்கூல் விட்டுப் போகும்போது அடிச்சுட்டு ஓடுற விஜயாவோட கல்யாணப் பத்திரிகை வந்ததே... அப்போ பார்த்து மாமியார் காலை ஒடிச்சுக்கிட்டாங்க; போக முடியல. காலேஜ்ல எதுக்கெடுத்தாலும் சிரிப்பாளே சாந்தி... எங்கேன்னே தெரியலப்பா. எப்படியோ தீபாவோட போன் நம்பர் கிடைச்சுது. ஆனா, இன்னும் பேச நேரம் வாய்க்கல..."
- இப்படி நழுவிப் போனவர்கள், தொலைந்து போனவர்கள், மறந்து போனவர்கள் பட்டியல் பெரிது, ரொம்ப ரொம்ப பெரிது.
சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' நாவலில் வரும் கதாநாயகன் மாதிரியோ, 'ஆட்டோகிராஃப்' படத்தின் சேரன் மாதிரியோ... பழைய நட்பைத் தேடிப் போய் புதுப்பிக்கும் பெண்கள் யாராவது இருக்க முடியுமா? (அது சரி... பள்ளிக்கால நண்பன், கல்லூரி நண்பன் என்று தேடித் தேடி பெண் ஒருத்தி தன் கல்யாணத்துக்குப் பத்திரிகை வைக்கும் கதையை யாராவது சினிமா எடுக்க முடியுமா என்ன?) நேரத்தை விழுங்கும் வேலைச் சங்கிலியா, 'தான், தன் குடும்பம்' என்று பெண் மீது கவியும் தன்னலப் போர்வையா... எது காரணம் என்று தெரியவில்லை. ஆனால், திருமணத்துக்குப் பின் பெண்ணின் தோழமை தொலைந்து போய்விடுவது என்னவோ நிஜம்.
கிராமத்துச் சிறுமிகள் இருவரின் நட்புப் பற்றி வைரமுத்துவின் கவிதை நினைவில் கண் சிமிட்டுகிறது. புழுதியில் விளையாடி, பிரியாமல் இருக்க 'ஒரே புருஷனுக்கு இருவரும் வாக்கப்பட' கனவு
கண்ட குழந்தைப் பருவ நட்பு சிதறிப் போகிறது...
'எப்படியோ பிரிவானோம்: இடி விழுந்த ஓடானோம்
தண்ணியில்லா காட்டுக்கு தாலி கட்டி நான் போக...
வரட்டூரு தாண்டி வாக்கப்பட்டு நீ போக...
உன் புருசன் உன் பிள்ளை உன் பொழப்பு உன்னோட...
என் புருசன் என் பிள்ளை என் பொழப்பு என்னோட...'
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், ராமன் - குகன், கிரேக்க புராணத்தில் வரும் டேமன் - பிதியஸ் என்று இலக்கியங்கள், புராணங்கள் தோறும் போற்றப்படும் நட்பெல்லாம் ஆண்களுக்குரியது. மருந்துக்குக்கூட பெண்ணும் பெண்ணும் கொள்ளும் நட்பென்னும் பெருநேசம் பேசப்படவில்லை. நம் சங்க இலக்கியங்களில் வரும் தோழியர், தலைவியின் காதலுக்குத் துணை போன அல்லது தலைவன் வருவான் என உறுதி கூறிய தன்னம்பிக்கை முனைகள் மட்டுமே.
மிஞ்சிப்போனால்... 'இதோ இதோ என் நெஞ்சிலே... ஒரே பாடல்' என்று 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தில் வரும் தோழிகள் சுமித்ரா - லதா, 'உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் எந்நாளுமே!' என்றபடி கண் முன்னே வந்து போவார்கள்.
நிஜத்தில்... அத்தி பூத்தது மாதிரி காட்சிக்குத் தெரியும் சில நட்புகள். போலீஸ் அதிகாரி ரத்தோர் போன்ற கொடூரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான டெல்லி டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா, தற்கொலை செய்துகொண்டாள். ரத்தோரின் முகத்திரையை உலகுக்குக் கிழித்துக் காட்டிய ஒரே சாட்சி, ருச்சிகாவின் தோழி ஆராதனா. 'என் தோழிக்கு நீதி வேண்டும்' என்று பதினெட்டு ஆண்டுகளாக வழக்கு நடக்கும்போதெல்லாம் இந்தியா வந்து போகிறாள்... தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியிருக்கும் ஆராதனா.
'எதிர் நீச்சல்' படத்தில் நாகேஷ் ஒரு வசனம் சொல்லுவார். 'நண்பனின் மரணத்தைவிட நட்பின் மரணம் கொடியது' என்று. தோழியின் மரணத்துக்குப் பின்னும், தோழமையை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆராதனா மாதிரி எத்தனை பேருக்கு நட்பு
வாய்க்கும்?!
என் மகளிடம் பள்ளியில் அவள் சிநேகிதிகள் யார் யார் என்று கேட்டேன். இரண்டு, மூன்று பேர்களைச் சொன்னாள்.
"எப்பவும் முதல் மார்க் வாங்கும் அர்ச்சனா இல்லையா?"
"அவளோடயும் பேசுவேன். ஆனா, ஃப்ரெண்டு இல்ல."
"அட பைத்தியமே, முதல் ரேங்க் வர்ற பெண்ணை ஃப்ரெண்டு பிடிச்சுக்கோ. அதுதான் உனக்கு நல்லது..."
அவளது பெரிய கண்கள் என்னைப் பார்க்கின்றன. தீவிர யோசனையில் முகம் குவிய, கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறாள்...
"முதல் ரேங்க் வர்றான்னு ஃபிரெண்டை மாத்த முடியாது. என் பழைய ஃபிரெண்டு வருத்தப்படுவா இல்ல..? ஃபிரெண்ட்ஷிப், தானே வரணும்."
நான் என் பெண்ணைப் பார்க்கிறேன். மூன்றரை அடியா அவள்?! எத்தனை விஸ்வரூபம் எடுத்துவிட்டாள். 'நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவேன்' என்று சொல்லாமல் சொல்லி விட்டாள் என் குட்டித் தேவதை. வளர்ந்துவிட்ட நம் உலகத்தில் நட்பு என்பதே ஏதோ லாபம் கருதி. ஆனால், குழந்தைகள் எத்தனை புனிதமான இடத்தை நட்புக்குத் தருகிறார்கள்!
பெருநதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்வு. நதியில் பயணத்தை ஒன்றாகவே தொடங்கிய பல மரங்களில் ஒவ்வொன்றின் பயணமும் வேறு வேறாகிப் போவது போல, தோழிகளின் சிரிப்பொலியோடு தொடங்கும் வாழ்வின் ஓட்டத்தில் ஒவ்வொருவராகப் பிரிவதும், ஒவ்வொரு நட்பையும் இழப்பதுமே இயல்பாகிறது.
'எதற்காகவும் என் சிநேகிதியைப் பிரிய மாட்டேன்' என்று நிற்கும் என் மகளைப் பார்க்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் தேங்கிய மழைநீரில் கை பிடித்து நடந்த இரு சிறு பெண்களை நினைக்கிறேன். பிரியாத நட்பென்னும் பெரு வரம்
இவர்களுக்காவது வாய்க்கட்டும்!

பாரதி பாஸ்கர்

 
 நன்றி அவள் விகடன்.