சர்க்கரைக்கு பயந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஏனெனில் செயற்கை சர்க்கரையில் உள்ள ரசாயனங்களினால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் என்று அதிர்ச்சியளித்துள்ளனர்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் உடலுக்குத் தேவையான சர்க்கரை கிடைத்துவிடுகிறது. சாதம், கோதுமை உணவுகள், உருளைக்கிழங்கு, பால், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும் போது, தனியாக சர்க்கரையை சேர்க்கவேண்டியதில்லை என்பது மருத்துவர்களின் அறிவுரை. தனியாக சேர்க்கப்படும் சர்க்கரையில் எந்த வித சத்துக்களும் இல்லை மாறாக கலோரிகள் அதிகரிக்கின்றன எனவே ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கடின உழைப்பாளிகள், குழந்தைகள் மட்டும் நாளொன்றுக்கு 3 முதல் 5 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாமாம்.
ஒரு சிலர் இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க்கரை பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். சர்க்கரையைத் தவிர்த்து, செயற்கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது என்கிற தவறான எண்ணத்தில், பலரும் ஒரு நாளைக்கு அதைச் சேர்த்து ஏகப்பட்ட காபி, டீ, குளிர்பானங்களை அருந்துகிறார்கள் இது தவறான செயல். ஏனெனில் செயற்கை சர்க்கரை என்பது நீரிழிவுக்காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே இல்லை.
சுக்ரலோஸ், சாக்ரின், ஆஸ்பர்டேம் என செயற்கை சர்க்கரை வகையறாக்கள் எல்லாமே ரசாயனக்கலப்புள்ளது. நீரிழிவு உள்ளவர்களாக இருந்தாலுமே, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த செயற்கை சர்க்கரையை எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்களும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் செயற்கை சர்க்கரையை அதிகமாக உபயோகிப்பதனால் ஒற்றைத் தலைவலி, மனஅழுத்தம், குழப்பம், கண்பார்வை குறைபாடு, புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். மேலும் செயற்கை சர்க்கரையினால் சுவாசக்கோளாறு, தோல் அரிப்பு போன்றவைகளும் ஏற்படுமாம்.
சர்க்கரைக்குப் பதில் சுத்தமான
தேன், கருப்பட்டி அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் கூட அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக